சனி, 15 ஜனவரி, 2011

சொல்வளம் - 1: விடைகள்

சொல்வளம் 1ல் கொடுத்த எல்லாச் சொற்களுமே திருக்குறளில் இருந்து எடுக்கப் பட்டவை.  இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் திருக்குறள் பயிற்சி இருக்கிறது என்றும் பொருள்.  வாழ்த்துகள்.

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்

தரம்  -  உங்கள் மதிப்பெண்

புலவர்                      -   18 - 20
தலைமாணாக்கர் - 15- 17
இடை மாணாக்கர்-   11 - 14
கற்றுக்குட்டி           -   6 - 10
குருட்டாம்போக்கு   1-5
தமிழ் தெரியாது     -    0 

======================================================

1. அழுக்காறு  4. பொறாமை
2. விசும்பு - 3. மழை மேகம்
3. பனுவல் - 2. நூல்
4. சிவிகை - 3. பல்லக்கு
5. வையம் - 2. பூமி
6. மாண்பு - 2. பெருமை
7. செறிவு2. கூட்டம்
8. ஊருணி - 2. குளம்
9. ஒப்புரவு - 3. ஒற்றுமை
10. வாய்மை- 4. உண்மை 
11. கேணி - 3. அகழி
12. கூகை - 4. கோட்டான் 
13. பிணி - 3. நோய் 
14. பண் - 2. இசை 
15. தாளாண்மை - 1. விடாமுயற்சி 
16. தகைமை - 2. மதிப்பு 
17. இடும்பை - 3. நோய்
18. வேட்கை - 3. விருப்பம்

19. வீறு - 1. சிறப்பு 
20. அங்கணம் 4. சாக்கடை

சொல் வளம் - 1 : உங்கள் தமிழ்த்திறனைத் தெரிந்து கொள்ளுங்கள்

பின் வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்.  உங்களுக்குக் கொடுக்கப் பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள்.  அகராதிகளையோ, வேறு நூல்களையோ, கூகிள், யாகூ போன்ற வலைத்தேடு பொறிகளையோ பயன்படுத்தக் கூடாது.  ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்.  விடைகளை இன்னொரு பதிவில் காணலாம்.

========================================================

1. அழுக்காறு
  1. சென்னையில் ஓடும் ஒரு ஆறு
  2. தூய்மையற்றது
  3. பொறுமை
  4. பொறாமை

2. விசும்பு
  1. தேம்பி அழு
  2. விக்கி அழு
  3. மழை மேகம்
  4. குறும்பு செய்

3. பனுவல்
  1. பணிதல்
  2. நூல்
  3. கண்டு
  4. தக்கிளி
4. சிவிகை
  1. ஒட்டகம்
  2. திமில்
  3. பல்லக்கு
  4. சிதைந்த கை
5. வையம்
  1. திட்டு
  2. பூமி
  3. வயல்
  4. நாற்று.
6. மாண்பு
  1. வீரம்
  2. பெருமை
  3. துணிவு
  4. அறிவு.
7. செறிவு
  1. செருப்பு
  2. கூட்டம்
  3. தோல்
  4. சிரங்கு.
8. ஊருணி
  1. புழு
  2. குளம்
  3. பெண்
  4. பறவை
9. ஒப்புரவு
  1. நெருங்கிய உறவு
  2. ஒப்பிடுதல்
  3. ஒற்றுமை
  4. திருமணம்.
10. வாய்மை
  1. உதட்டுச்சாயம்
  2. வரவேற்பு
  3. பேச்சுத்திறமை
  4. உண்மை
11. கேணி
  1. கேள்வி
  2. காது
  3. அகழி
  4. முட்டாள் பெண்
12. கூகை
  1. துதிக்கை
  2. படுக்கை
  3. சுண்டெலி
  4. கோட்டான்
13. பிணி
  1. வேலை
  2. சோம்பல்
  3. நோய்
  4. மருந்து
14. பண்
  1. காயம்
  2. இசை
  3. ஒரு வகையான ரொட்டி
  4. எலிப்பொறி
15. தாளாண்மை
  1. விடாமுயற்சி
  2. போர்க்குணம்
  3. மேலாண்மை
  4. காலாட்படை
16. தகைமை
  1. நகச்சாயம்
  2. மதிப்பு
  3. நட்பு
  4. மென்மை
17. இடும்பை
  1. கசப்பு
  2. பசப்பு
  3. நோய்
  4. பசலை.
18. வேட்கை
  1. கொடுக்கும் கை அல்லது வலது கை
  2. தேர்தல்
  3. விருப்பம்
  4. திருமணம்
19. வீறு
  1. சிறப்பு
  2. அலறு
  3. எறி
  4. கொடி
20. அங்கணம்
  1. கோவணம்
  2. அடிமைத்தனம்
  3. அரக்கர் படை
  4. சாக்கடை

சொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” வலைப்பூ இன்று தொடங்குகிறது...

நண்பர்களே,
 
ஆங்கிலத்தில் சொல்வளத்தைப் (vocabulary) பெருக்கிக் கொள்ள நம்மில் பலர் பெரும் பயிற்சி எடுத்திருக்கிறோம். கல்லூரி நாள்களில் நார்மல் லூயிஸ் எழுதிய ”உவோர்ட் பவர் மேட் ஈசி” என்ற நூல் அதுவரை ஆங்கிலச் சொற்களை நினைவில் கொள்வதற்குத் தடுமாறிக் கொண்டிருந்த எனக்குக் கருவூலத்துக்குக் கிடைத்த திறவுகோல் போல பெரிய வரமாகக் கிடைத்தது.
 
அப்படித் தெரிந்து கொண்ட சொற்களைப் பயில, நம் அறிவை அடிக்கடிச் சோதித்துக் கொள்ள வேண்டும்.  ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றும் இதழில் வேறு எதைப் படிக்கிறேனோ இல்லையோ, அதன் உவோர்ட் பவர் பத்தியைப் படித்து விடுவேன்.
 
வட அமெரிக்கத் திங்களிதழ் “தென்றல்” என்ற இதழில் ஆசிரியராக இருந்த ஒரு காலத்தில் நண்பர் வாஞ்சிநாதன் எழுதி வரும் குறுக்கெழுத்துப் புதிர் தொடரை விரும்பிப் படிப்பேன்.  அப்போதுதான், இதற்குத் துணைப் பத்தியாக சொல்வளம் பெருக்க ஒரு தொடரைத் தொடங்கலாமே என்று எண்ணினேன். நண்பர் அட்லான்டா பெரியண்ணன் சந்திரசேகரனுடன் இதைப் பற்றிப் பேசினேன்.  சென்னை வந்திருந்தபோது நண்பர்கள் அசோகன், வாஞ்சி, ஹரிகிருஷ்ணன், மதுரபாரதி ஆகியோரிடம் இதைப் பற்றிப் பேசினேன்.  நல்ல கருத்து என்று எல்லோரும் வரவேற்றார்கள்.  ஆனால், என்ன காரணம் என்று நினைவில்லை.  இந்த விதை வளராமலே போய் விட்டது.
 
ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறக இது போன்ற பத்திகளோ, வலைப்பூவோ இது வரை என் கண்ணில் படவில்லை.  அப்படி ஏதும் இருந்தால் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
 
சில மாதங்களுக்கு முன்னர் முனைவர் ராஜம் அவர்களின் இலக்கணப் பதிவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஆங்கிலத்தின் ”விஷுவல் திசாரஸ்” போன்ற ஓர் களத்தை அமைப்பது பற்றிப் பேசினார்கள்.  ஆங்கிலத்தில் சொல்வளம் பெருக்கிக் கொள்ள எண்ணற்ற பல வசதிகள் இருக்கின்றன.  சிறு வயதில், ஆங்கிலம் கற்றுக் கொள்ள இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளின் ஆசிரியருக்குக் கடிதங்கள் பின்னர் விளையாட்டுப் பகுதி என்று எளிமையான பகுதிகளைப் படித்து, தெரியாத சொற்களை அடிக்கோடிட்டு, அகராதி பார்த்து, அதைச் சொற்றொடர்களில் எப்படிச் சேர்ப்பது என்று தேடி, உச்சரிப்பு பயின்று,  பிபிசி வானொலியில் கேட்டு, என்று பல வழிகளில் இந்தத் தெரியாத மொழியைக் கையில் கொண்டு வருவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறேன்.
 
ஆனால் தாய்மொழியான தமிழில் சொல்வளம் பெருக்குவதற்கு இவ்வளவு கடும் முயற்சி எடுத்ததில்லை. இது அப்போது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், இப்போதெல்லாம், பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசும்போது ஏன் இதற்கான தமிழ்ச் சொற்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை என்று பார்க்கும்போது, ஆங்கிலத்தில் சொல்வளம் பெருக்கிக் கொள்ள இருக்கும் வசதிகளும், வாய்ப்பும் தமிழில் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
 
இப்படிப் பட்ட சொல்வளக் களஞ்சியங்களை அமைப்பது என்பது கடுமையான உழைப்பும், ஆழ்ந்த தமிழறிவும், கற்போருக்கு எளிதாகக் கற்பிக்கும் பயிற்சியும், எளிமையாக எழுதும் திறமையும் எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றவர்களால் மட்டுமே செய்யக் கூடிய செயல்.  அதிலும் இதைத் தொடங்கினால், இதில் மட்டுமே காலை ஊன்றி ஒரு தவம் போலத் தொடர்ந்து செய்ய வேண்டிய பணி.  இவை எவற்றிற்குமே சற்றும் தகுதியற்ற நான் இப்படிப் பட்ட பெருமுயற்சியைத் தொடங்க வேண்டாமே என்று பல ஆண்டுகளாகத் தவிர்த்து வந்துள்ளேன்.  ஆனால், என்னைப் போன்ற தமிழில் ஆர்வமுள்ள பொறியாளன் இப்படி ஒரு வலைப்பூவைத் தொடங்கினால், பெரும் அறிஞர்களை ஒவ்வொரு வாரமும் அழைத்து வந்து அவர்களை வைத்துப் பல படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக இருக்கலாமே என்று ஒரு நம்பிக்கையோடு, 2011 பொங்கல் நாளன்று சொல்வளம் என்ற வலைப்பூவுக்கு அடிக்கல் நாட்டுகிறேன்.
 
இதன் முதல் படைப்பு மிகவும் எளிமையாக இருந்தாலும், வளர வளர இதன் வளத்தைக் கூட்டலாம் என்ற நம்பிக்கை உண்டு.  முதலில் சிறிய தேர்வுகளாகத் தொடக்கிப் பின்னர் வேர்ச்சொற்கள், கிளைச்சொற்கள் இவற்றை எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையில் சொல்வளக் கட்டுரைகளையும் பயிற்சிகளையும் சேர்க்கலாம். இந்தச் சிறு முயற்சிக்கு நண்பர்களின் அறிவுரையையும், பங்கேற்பையும் மிகவும் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.
 
இந்த வலைப்பூவின் முகவரி:  http://col-valam.blogspot.com/
 
இந்த வாரம் தமிழ்மணம் திரட்டியின் தாரகையாக என்னை அறிவித்துள்ளனர். (http://tamilmanam.net/star.html ).  மாதம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்த என்னை, நாளும் ஒரு பதிவு எழுதப் பணித்து எண்ணற்ற பல தமிழ்மணம் வாசகர்களுக்கு என்னை அறிமுகப் படுத்தியுள்ளதற்கு எனது நன்றி.
 
இதில் இது வரை நான் எழுதிய பதிவுகளின் தொடுப்புகளைக் கீழே தந்திருக்கிறேன்.  உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு
 
இந்த வார நட்சத்திர இடுகைகள்
 

எனது பதிவுகளில் விரும்பிப் படிக்கப் பட்டவை:

04-Jul-2010, 1 comment










05-Nov-2010, 9 comments










05-Sep-2010, 14 comment
s









28-Nov-2010, 14 comments










29-Oct-2010, 4 comment
s









07-Nov-2010
 









27-Nov-2010, 9 comment
s









23-Nov-2010, 7 comments










02-Jan-2011, 1 comment










31-Dec-2010, 9 comment
s